மேல்மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாகவும் அது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஐனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்றத்தில் அக் கட்சியின் ஊடக செயலாளர் சி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஐனநாயக மக்கள் முண்ணனி ஆதரவு வழங்கியிருந்தது.
அத்தோடு தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்பட்டதுடன் தற்போதும் செயற்பட்டு வருகின்றது.
ஆகவே கொழும்பில் செறிந்து வாழும் வாக்குரிமையுள்ள தமிழ் மக்கள் அரசின் சூழ்சிகளுக்கு உட்படாமல் தமது வாக்குகளை சிதறடிக்காமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் இனபரம்பல் பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. போரினால் இறந்தவர்கள் காணாமல் போனவர்கள் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறியவர்கள் மற்றும் பிறப்பு வீதம் குறைவு என தமிழ் மக்களின் தொகை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அத்துடன் இந்திய போன்ற அகதிகளாக வாழும் மக்களும் இங்கு வர விரும்புகின்றனர். ஆனால் அச்சுறுத்தல்கள் காரணமாகவும் அவர்களின் காணிகளை இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளதாலும் அவர்கள் இங்கு வரவல்லை.
வடக்கில் ஒருகாலத்தில் 11 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தது பிறகு 10, 09 என குறைவடைந்து தற்போது 6 உறுப்பினர்கள் என தெரிவிக்கபப்டுகின்றது .
எனவே தமிழ் எங்கிருந்தாலும் ஒன்றுபட்டு சிந்தித்துச் செயற்பட வேண்டும். அத்தோடு ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருகின்றது. விரைவில் அது தொடர்பாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Post a Comment