0
சிலிக்கான் வேலி – உலக கம்ப்யூட்டர் தொழில்நுட்ப புரட்சியின் நடுமையம்.  கம்ப்யூட்டர் இன்ஜினியர்களின் கனவுப் பிரதேசம். அமெரிக்காவில் இருக்கும் இந்த சிலிக்கான் வேலியைப்போல தங்கள் நாட்டிலும் உருவாக்க வேண்டும் என பல நாடுகள் எவ்வளவோ முயற்சித்தன. ஆனால், சாத்தியமாகவில்லை. எனினும் இந்தியாவில் இதை சாத்தியமாக்க முடியும் என்கிறார் சங்கர் நாராயணன்.

செல்போனில் கேமரா தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். பதினைந்து ஆண்டுகளுக்குமுன் சிலிக்கான் வேலி சென்றவர், செல்போனில் வீடியோ தொழில்நுட்பம், எம்பிஇஜி 2 வன்பொருள் கோடு என தொடர் தொழில் முனைவராக வெற்றி பெற்றவர். தற்போது புதிய தொழில்முனைவோர் களுக்கான ஆலோசனை மற்றும் முதலீடுகள் மேற்கொண்டு வருகிறார்.
சிலிக்கான் வேலியாக சென்னை மாறுவது எப்படி சாத்தியம் என்று  பார்க்கும்முன் சிலிக்கான் வேலி பற்றிய அடிப்படைத் தகவல்களை பற்றி கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெனேஜ்மென்டின் செயல் இயக்குநர் ஸ்ரீராம் கூறுவதைப் பார்ப்போம்.
உதாரண பூமி!
”சிலிக்கான் வேலிதான் பொருளாதார வளர்ச்சியின் முன்மாதிரி. பல நாடுகளின் ஜி.டி.பி-யைவிட சிலிக்கான் வேலியின் ஜி.டி.பி அதிகம். சுமார் 1,500 சதுர கி.மீட்டர் கொண்ட சிலிக்கான் வேலி 150 நாடுகளின் ஜி.டி.பி.-யோடு ஒப்பிடும்போது அதிகம். உலக அளவில் தொழில்நுட்ப துறையின் வெற்றியின் அடையாளமாக சிலிக்கான் வேலி உள்ளது. தவிர, தனிநபர் வருமானம்,
வெஞ்சர் கேப்பிட்டல், அறிவுசார் முதலீடுகள், காப்பிரைட் எனப் பலதரப்பட்ட வகைகளிலும் சிலிக்கான் வேலி உலக அளவில் ஓர் உதாரண பூமிதான்.
1939-ல் இருந்து தொடங்கும் இந்த வரலாற்றில் உலகின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், இண்டெல், ஏ.எம்.டி, ஹெச்.பி, சன்மைக்ரோ சிஸ்டம், ஆரக்கில், சிஸ்கோ எனப் பல நிறுவனங்கள் இங்கிருந்துதான் வந்துள்ளன.
வெற்றிக்கான சூத்திரம்!
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த பணிகள்தான் சிலிக்கான் வேலியில் அதிகம் நடக்கிறது. சிலிக்கான் வேலியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர் அண்ட் டி) பணிகளில் ஈடுபட்டுள்ளவர் 10%பேர். இது அமெரிக்காவின் தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம். அதாவது, அமெரிக்காவில் 100 நபர் களில் 3 பேர்தான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளில் ஈடுபடுகிறார்கள் எனில்,  சிலிக்கான் வேலியில் 10 பேர் ஈடுபடுகிறார்கள். அதாவது, மேம்பாட்டுக்கான முதலீடாக இதைப் பார்க்கிறார்கள்.
சிலிக்கான் வேலியின் வெற்றிக்கு அதுமட்டுமே காரணமில்லை. டெக்னாலஜியை யும் அறிவையும் வைத்து எப்படி டெவலப் பண்ணுவது, மார்க்கெட்டிங் செய்வது என்பதில்தான் அவர்களது வெற்றி உள்ளது. அதாவது, முன்னணி நிறுவனங்களின் இன்னோவேஷன் எல்லாம் சிலிக்கான் வேலியில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. எங்கோ யாரோ செய்ததைத் தங்களுக்கேற்ற வகையில் உபயோகத்துக்குக் கொண்டு வந்ததுதான் அவர்கள் செய்த வேலை.
டெக்னாலஜி இன்னோவேஷனை வளர்த் தெடுப்பதும், அதை பிராண்டாக மாற்றி உலக அளவில் மார்க்கெட் செய்வதைத்தான் சிலிக்கான் வேலி செய்துவருகிறது.
சிலிக்கான் வேலியின் முக்கிய கலாசாரம், வெளிப்படை தன்மைதான். நிறுவனத்திலிருந்து ஓர் ஆள் வெளியேறி போட்டி நிறுவனம் தொடங்க முடியும். அறிவுசார் விஷயங்களில் காப்பிரைட் இருந்தாலும் ரகசியங்கள் எதுவும் கிடையாது. எந்த யோசனைகளையும் வெளிப்படையாகப் பேசலாம்.  ஐடியாவை பகிர்ந்துகொள்வது!
ஒரு ஐடியாவை மேம்படுத்த ஒப்பந்தங்கள் போட்டுக் கொள்வதும், மியூச்சுவல் ஃபீட்பேக் வாங்க ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொள்வதும், ஐடியாவை மேம்படுத்துவதும் சிலிக்கான் வேலியில் நடக்கிறது. அதிகபட்சமான ஃபிளக்ஸிபிலிட்டி, வேகமான எதிர்வினை போன்ற விஷயங்கள்தான் சிலிக்கான் வேலியின் வளர்ச்சிக்கு அடிப்படை காரணங்கள்” என்று பேசி முடித்தார் பேராசிரியர் ஸ்ரீராம்.
அவரைத் தொடர்ந்து சென்னையை எப்படி சிலிக்கான் வேலியாக மாற்ற முடியும் என்பதை எடுத்துச் சொன்னார் சங்கர் நாராயணன்.
”சிலிக்கான் வேலியின் வெற்றிக்கு முக்கிய காரணமே, அதன் விஷன்தான். எந்தத் தொழில் என்றாலும் அதை ஏன் நாமே சொந்தமாகச் செய்யக்கூடாது என்பதுதான் அங்கு நிகழ்ந்த மாற்றத்தின் முதல்படி.
இந்த மாற்றம் நம் நாட்டில் நடக்க, முதலில் நம் கல்விமுறை மாறவேண்டும். நம் சிந்தனைப் போக்கு மாறவேண்டும். படித்துவிட்டு நல்ல வேலைக்குப் போ என்றுதான் இங்குச் சொல்கிறார்கள். ஆனால், அங்கு அப்படியில்லை. படித்துவிட்டு புதுசா ஏதாவது நீயே செய் என்று ஊக்கப்படுத்துகிறார்கள்.  இதன் காரணமாக மாணவர்களின் சிந்தனைமுறை மாறுகிறது. நம் கல்வியில் மாற்றம் வருவது காலத்தின் கட்டாயம்.
சொந்தத் தொழில்!
தொழில் துறையில் நம் நாட்டினரின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் நன்கு வளர்ந்திருக்கிறது. இது ஒரு பாசிட்டிவ்வான விஷயம்தான். அதேநேரத்தில் இந்த இருபது வருடங்களில் நமது உழைப்பை, சிந்தனையை, அறிவை வேறொரு நாடு அல்லது வேறொரு நிறுவனத்துக்குதான் தந்திருக்கிறோம். நமக்கான எதையும் உருவாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் சொல்வதை செய்கிறோம்.  அதாவது, கான்ட்ராக்ட் மேனுபேக்ஸரிங் வேலை செய் கிறோம். இது மாற வேண்டும்.
உலகத்துக்கு நான் ஏதாவது கண்டுபிடித்து தரவேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டும். பதினைந்து வருடத்துக்கு முன்னர் செல்போன் கேமராவுக்கு சாஃப்ட்வேர் கண்டுபிடித்தபோது, அதை பின்லாந்து நோக்கியாவுக்குக் கொடுத்தேன். இதன்மூலம் பயனடைந்தது அமெரிக்காவும், அந்த லைசென்ஸைப் பெற்றுக் கொண்ட பின்லாந்தும்தான். சென்னை, பெங்களூரில் இருந்துகொண்டு அதைக் கண்டுபிடித்த என்னால், அதை அமெரிக்காவில்தான் வெளியிட முடிந்தது. அமெரிக்க கம்பெனி, இந்திய மூளையை சிலிக்கான் வேலியில் உட்கார்ந்துகொண்டு பயன்படுத்திக்கொண்டது. இதில்தான் மாற்றம் வேண்டும். இந்திய நிறுவனம், இந்தியனை தலைவராகக்கொண்டு, இந்தியா விலிருந்து செல்ல வேண்டும்.
தொழிற்துறையின் உதவி!
தொழிற்துறையினரின் சிந்தனையும் மாறவேண்டும். எந்தத் தயாரிப்பாக இருந்தாலும், அதை எப்படி மேம்படுத்துவது, அதை எப்படி உலகச் சந்தைக்குக் கொண்டுசெல்வது என்பதை ஊக்குவிக்க வேண்டும். மைக்ரோசாஃப்ட், கூகுள், சிஸ்கோ போன்ற நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களுக்குக் கொடுக்கும் பங்களிப்பை இங்கு தொழில் குடும்பங்களும் கவனிக்க வேண்டும். புதுத் தொழில்முனைவோர்கள் வருவதை ஊக்குவிக்க வேண்டும். புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிப் பதும் அவர்களிடமிருந்து சிறந்த உதவியை வாங்குவது எப்படி என்பதையும் யோசிக்க வேண்டும். புதிய வேகத்தோடு வரும் இளைஞர்களை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஒரு பெரிய குழுமம் இருக்கிறது. வெளிநாடுகள் வரை கூட்டுத் தொழில்கள் செய்யலாம். ஆனால், பெரிய அளவில் வளர்ந்தபிறகு, சின்னச் சின்ன விஷயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியாது. அவர்கள் அறியாமலேயே சிறுசிறு பிழைகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த இடத்தில் என்ன செய்வார்கள் எனில், புதிய ஆட்களை வேலைக்கு எடுத்து சம்பளத்துக்கு வைத்துக் கொள்வார்கள். இதுமாதிரி பிரச்னையைத் தீர்க்கும் தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும்.
ரிசர்ச் இன்ஸ்டிட்யூஷன்ஸ்!
கல்வியாளர்கள், நிறுவனங் கள் உதவியை எதிர்பார்க்கலாம். அரசு ஊக்குவிப்பை எதிர்பார்க்கலாம். ஆனால், இதை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்கள் அவர்களது மாணவர்களுக்கு மட்டும்தான் உதவி செய்கிறது. அப்படியில்லாமல், பாரபட்சம் இன்றி உத்வேகத்தோடு வரும் புதிய தொழில் முனைவோர் களை உருவாக்கும் ஒருமுறை உருவாக வேண்டும். பல்வேறு தொழில்களுக்குமான லேப் செட்டப்புகள் உருவாக்க வேண்டும்.
முதலீடுகள்!
இதுபோன்ற முயற்சிகளைத் தொடங்க பணம் வேண்டுமே என யோசிக்க வேண்டாம். இதற்கு
வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனங் கள் தயாராக இருக்கின்றன. சிலிக்கான் வேலி இதைப் பயன்படுத்திதான் வளர்ந்தது. நமது முயற்சி முதற்கட்டமாக வெற்றிபெறும்போது
வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் தானாகவே வருவார்கள். எனவே, இந்த வாய்ப்புகளை உருவாக்கும் வழிமுறைகளை யோசிப்போம்.
புதிதாக யோசிக்கும் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும் இளைஞர்கள், ஆய்வு மற்றும் மேம்பாடுகளில் ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தும் கல்வி நிலையங்கள் மற்றும் தொழிற்துறையினர் இணந்து முயற்சித்தால்தான் வெற்றி காணமுடியும். இவர்களை இணைப்பதற்கு நானும் கிரேட்லேக்ஸ் இன்ஸ்டிடியூட்டும் தயாராக இருக்கிறோம்” என்று முடித்தார் சங்கர் நாராயணன்.
நம் ஒட்டுமொத்த சிந்தனை யும் அடியோடு மாறினால்தான் சென்னை ஒரு சிலிக்கான் வேலியாக மலரும்!

Post a Comment

 
Top