0
எடப்பாடியை அடுத்து உள்ள கோனேரிப்பட்டி காவிரி கதவணை நீர் தேக்கத்தில் கடந்த மாதம் கதவணையில் இருந்த பெருமளவு நீர் வெளியேற்றபட்டது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளது.



பரந்து விரிந்து கடல்போல் காட்சி அளித்து வரும் நிலையில் அப்பகுதியில் மீனவர்கள் பரிசல்கள் மூலம் சென்று ஆற்றின் பல்வேறு பகுதிகளில் மீன்பிடித்து வருகிறார்கள். விரிவலை, கன்னி, துண்டில், உடுவலை என்று பவகை மீன் வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகிறார்கள்.


இந்த நிலையில் அங்கு வழக்கமாக மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த கோனேரிப்பட்டியை சேர்ந்த வீரமணி, கணேசன் ஆகியோர் விரித்த வலையில் சுமார் 3 கிலோ எடை உள்ள அதிசய விலாங்கு மீன் சிக்கியது. அந்த மீன் வழக்கமாக மீனவர்கள் வலையில் கிடைத்திடும் கரும் பழுப்பு நிற விலாங்கு மீனில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தங்க நிற தோற்றத்தில் இருந்தது. 


மிகவும் சுறுசுறுப்புடன் காணப்பட்ட அந்த மீன் உயிருடன் கரைக்கு கொண்டு வரப்பட்டு கோனேரிப்பட்டி பாலம் அருகில் உள்ள மீன் மார்கெட்டில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மீன் வாங்க வந்தவர்கள் பெரும் கூட்டமாக அந்த அழகிய நிறத்தில் இருந்த மீனை கண்டு வியந்தனர்.


மேலும் அதனை போட்டி போட்டு விலைக்கு கேட்டனர் பூமணியூர் பகுதியை சேர்ந்த பூபதி அதனை அதிக விலை கொடுத்து வாங்கி சென்றார். இந்த மீனை பிடித்து வந்த மீனவர்களான வீரமணி, கணேசன் ஆகியோர் கூறியதாவது:–


நாங்கள் 25 ஆண்டு காலமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இதுபோன்ற அரியவகை மீனை கண்டதில்லை. இதனை பிடித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

 
Top