0
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு எம்.பி. துளசி காப்பர்ட் கீதையை பரிசாக வழங்கினார். 


அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான துளசி காப்பர்ட் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தனது பகவத் கீதை புத்தகத்தை துளசி காப்பர்ட், பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தார். இந்தியாவின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக இதனை செய்வதாக துளசி காப்பர்ட் தெரிவித்துள்ளார். 


துளசி காப்பர்ட் (33), அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் அவையின் உறுப்பினராக பதவியேற்ற போது, பகவத் கீதை மீது உறுதிமொழி எடுத்தார். "நான் உங்களுக்கு கொடுத்த கீதை குழந்தையில் இருந்து வைத்திருந்தேன். மத்திய கிழக்கில் போர் பணியில் ஈடுபட்டபோதும் பாதுகாப்பிற்காக கீதையை வைத்திருந்தேன். கீதையின் மீது உறுதுமொழி எடுத்தேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்." என்று துளசி காப்பர்ட் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின்னர் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். 


நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய துளசி காப்பர்ட் அவருக்கு மாலை அணிவித்த காட்சி. 

துளசி காப்பர்ட் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் அவையின் உறுப்பினராக பதவியேற்ற போது, பகவத் கீதை மீது உறுதிமொழி எடுத்தார். அமெரிக்க எம்.பி.யாக பதவியேற்ற முதல் இந்து என்ற பெருமையும் பெற்றவர். துளசி காப்பர்ட் இந்துவாக இருந்தாலும் அவர் இந்தியாவை சேர்ந்தவரோ அல்லது இந்திய வம்சாவளியை சேர்ந்தவரோ அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 


ஹவாயில் இருந்து அவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்க சமோவாவை பூர்விகமாகக் கொண்ட துளசியின் தந்தை கத்தோலிக்க தேவாலயத்தில் போதகர். ஆனால் அவரது தாய் கரோல் போர்டர் ஹிந்து மதத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டு தன்னை ஹிந்துவாக அறிவித்துக் கொண்டவர். கரோல் சிறந்த கல்வியாளர், தொழிலதிபரும் ஆவார். அவரது குடும்பத்தினரும் ஹிந்து மதத்தை ஏற்றுக் கொண்டனர்.


பாராளுமன்றத்தில் கீதை மீது உறுதிமொழி எடுத்தது குறித்து அப்போது பேசிய துளசி, "எனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பகவத் கீதை எனக்கு வழிகாட்டியது. பிரச்னைகளின் போது மன அமைதியையும், சவால்களை எதிர்கொள்ள தேவையான உறுதியையும் கீதையில் இருந்து பெற்றுள்ளேன். 


கீதையில் உள்ள ஆழமான ஆன்மிகக் கருத்துகள் அனைத்தும் வியப்பை ஏற்படுத்துபவை. மக்கள் பணியாற்றுவதே எனது வாழ்க்கை என்று முடிவாகிவிட்ட நிலையில், கீதை மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். நமது வாழ்வின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து கொள்ள ஆன்மிகமே உதவுகிறது." என்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

 
Top