0
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது.

பெங்களூர் சிறையில் ஜெயலலிதா

இதேபோல், அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ஜாமீன் மனு

ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் அ.தி. மு.க.வின் சட்டப்பிரிவு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. வக்கீல்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில் டெல்லி மேல்-சபை உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து, பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும், சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

15 பக்கங்களை கொண்ட ஜாமீன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மருத்துவ சிகிச்சை

வழக்கில் தண்டனை விதிக் கப்பட்டு இருக்கும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக இருந்தவர். ‘இசட்’ பிரிவு பாதுகாப்புடன் மிகமிக முக்கிய பிரமுகர் அந்தஸ்தில் இருப்பவர். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார். எனவே அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். பெங்களூரில் உள்ள சூழ்நிலைகள் அவரது உடல் நிலைக்கு ஒவ்வாது என்பதால், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். நாட்டை விட்டும் வெளியேற மாட்டார்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

தவறான குற்றச்சாட்டு

சென்னையில் வருமானவரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சொத்துகள் சட்டவிரோதமானது அல்ல என்றும், அவர் குற்றம் அற்றவர் என்றும் கூறப்பட்டு உள்ளதாகவும், இதை பெங்களூர் தனிக்கோர்ட்டு கவனத்தில் கொள்ளவில்லை என்றும், அதை சுட்டிக்காட்டி தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் மற்றொரு மனுவில் கோரப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தவறானது என்றும், சட்டப்படிதான் அவர் சொத்துகள் வாங்கியதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இன்று விசாரணை

கர்நாடக ஐகோர்ட்டுக்கு வருகிற அக்டோபர் 5-ந் தேதி வரை தசரா விடுமுறை ஆகும். இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் விடுமுறை கால கோர்ட்டு கூடுகிறது.

எனவே ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. நீதிபதிகள் ரத்தினகலா, அப்துல் நசீர், ரவிக்குமார் ஆகிய 3 பேரில் யாராவது ஒருவர் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வரலாம் என்று கருதப்படுகிறது.

ஒருவேளை இன்று மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், தசரா விடுமுறை முடிந்து மீண்டும் 6-ந் தேதி ஐகோர்ட்டு கூடும் போதுதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இதேபோல், இந்த வழக்கில் தண்டனை பெற்று உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் ஜாமீன் கோருவது உள்பட தலா 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

ராம் ஜெத்மலானி

ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையின் போது, அவரது சார்பில், டெல்லி மேல்-சபை எம்.பி. யும் பிரபல வக்கீலுமான ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடுகிறார். இதற்காக நேற்று அவர் அவசரமாக பெங்களூர் வந்தார். 

Post a Comment

 
Top