0
சென்னையில் பயிற்சி முடித்த 62 பெண்கள் உள்பட 256 அதிகாரிகள், ராணுவத்தில் சனிக்கிழமை முறைப்படி சேர்ந்தனர். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவியும் பயிற்சி முடித்து ராணுவ அதிகாரியானார்.


ராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 62 பெண்கள் உள்பட 256 பேருக்கு சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாத பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து அனைவரும் ராணுவத்தில் சனிக்கிழமை இணைந்தனர். இதையொட்டி, மாலத்தீவு பாதுகாப்பு படை தலைவர் மேஜர் ஜெனரல் அஹ்மத் ஷியாம் முன்னிலையில் பயிற்சி முடித்தவர்களின் அணிவகுப்பு சனிக்கிழமை நடந்தது.


இவர்களுடன் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒருவரும் செஷல்ஸ் நாட்டைச் சேர்ந்த 4 பேரும் பயிற்சி பெற்றனர். பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட சோனுசிங் பதுரியாவுக்கு வீர வாள் வழங்கப்பட்டது, அஜய்பால் சிங்குக்கு தங்கப் பதக்கமும், அதுல் பதானியாவுக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது.
 
 முதல் பிறந்த நாள்


பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மதுரையைச் சேர்ந்த பொற்செல்வன் கூறுகையில், “இதுதான் எனது முதல் பிறந்தநாள்போல் உள்ளது. பொறியியல் முடித்து ஐ.டி.நிறுவனத்தில் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்தேன். அது பிடிக்காமல், ராணுவத்தில் சேர்ந்துவிட்டேன். எனது குடும்பத்தில் முதன்முதலாக ராணுவத்தில் சேர்ந்திருப்பவன் நான்தான். எனது தந்தை அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளார்” என்றார்.
 
அதிகாரியான வீரரின் மனைவி


இந்தப் பயிற்சியை முடித்தவர்களில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் பகுதியைச் சேர்ந்த ப்ரியா சேம்வால் என்பவரும் ஒருவர். இவர், ராணுவத்தில் பொறியியல் துறையில் அதிகாரியாக பணியாற்ற உள்ளார். அவருக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.


ப்ரியாவின் கணவர் அமித் ஷர்மா, 2 ஆண்டுகளுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்திருந்த அமித் ஷர்மா, தனது மனைவியை மேற்படிப்பு படிக்க வைத்தார். கணிதத்தில் முதுகலையும், ஆசிரியர் பயிற்சியும் முடிக்க உதவியுள்ளார். கணவர் இறந்ததும், ராணுவ உயர் அதிகாரி அளித்த ஊக்கம் காரணமாக, ப்ரியா ராணுவ பயிற்சியில் சேர்ந்தார். 

ஆனந்தக் கண்ணீர்

 
பயிற்சி அணிவகுப்பைக் காண ப்ரியாவின் அம்மா, அண்ணன், பெரியம்மா மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர். அணிவகுப்பில் ப்ரியா கம்பீரமாக நடைபோட்டதைப் பார்த்து அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.


ப்ரியா பேசுகையில், “எனக்கு மிகவும் பெருமையான தருணம் இது. என்னால் வெல்ல முடியும் என்று நிரூபித்து இருக்கிறேன். நான் ராணுவத்தில் சேர்ந்ததே எனது கணவருக்காகத்தான். என் குழந்தையும் ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.


அவருக்கு ஊக்கமளித்த ராணுவ அதிகாரி அருண் பி.அகர்வால் கூறுகையில், “ராணுவ வீரரின் மனைவி ஒருவர் ராணுவ அதிகாரியாக ஆவது இதுதான் முதல்முறை. பெரிய பின்புலம் இல்லாத குடும்பத்தில் கிராமத்தில் இருந்து வந்தாலும் ஒன்றரை மாதம் படித்து, ராணுவ அதிகாரிகள் பயிற்சியை முதல் முறையிலேயே முடித்துவிட்டார். நிச்சயமாக பல பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பார்” என்றார்.

Post a Comment

 
Top