தெற்காசிய பிராந்தியத்தில் இன்னுமொரு மகிந்த ராஜபக்ஷ, அரசத் தலைவராக உருவாகியுள்ளார். தெற்காசிய பிராந்தியத்தில் இன்னுமொரு மகிந்த ராஜபக்ஷ, அரசத் தலைவராக உருவாகியுள்ளார்.
அந்த வகையில் அவருக்கு எமது மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளை அடுத்து நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று, இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி நியமிக்கப்படவுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஒரு பலமுள்ள அரசாங்கத்தின் பலமுள்ள தலைவராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறானதொரு நிலை இருக்குமானால்தான் ஒரு நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.
இந்நிலையில் அகில இந்திய அண்ணா திராவிட கழகம் கட்சியைச் சார்ந்து தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு, மோடியின் அரசுக்குத் தேவைப்படாத நிலையிலும் தமிழக அரசு மத்திய அரசுடன் நல்லுறவுடன் செயற்படுவதன் மூலமே தமிழ்நாட்டில் அபிவிருத்தி உட்பட ஏனைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலும். இதனை தமிழக முதலமைச்சர் ஏற்று நடக்கக் கூடுமென நான் எதிர்பார்க்கின்றேன்.
இதேபோன்றதொரு நிலைதான் இலங்கையிலும் நிலவுகின்றது. இங்கே பலமானதொரு அரசு ஆட்சியிலிருக்கிறது. பலமிக்கதொரு தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் விளங்குகின்றார்.
பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவரும் தயாராக இருக்கின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலமே எமது பிரச்சினைகளை இலகுவாகவும் நிலையான வகையிலும் தீர்த்துக் கொள்ள இயலும். எனவே வெறும் நொண்டிச் சாட்டுக்களை அடுக்கிக் கொண்டு இருக்காமல் எமது மக்களின் நலன்கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதயசுத்தியுடன் செயற்பட முன்வர வேண்டும்.
கடந்தகாலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் இடைநடுவில் முறித்துக் கொண்டமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வரலாறு.
அதேபோன்று மத்திய அரசுடன் நல்லுறவுடன் செயற்படுவது வெறும் அரசியல் சார்ந்த வி;டயமல்ல. வளங்களை பகிர்ந்து கொள்வதும் அதில் அடங்குகின்றது என்பதையும்; வடக்கு மாகாணசபையின் ஆளும் தரப்பினரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறானதொரு நிலையில் இன்னும் எஞ்சியிருக்கின்ற எமது மக்களின் பிரச்சினைகளை நாமே இலகுவாகத் தீர்த்துக் கொள்வதற்கு நரேந்திர மோடியின் அரசு எமக்கு உதவுமென்று நான் நம்புகின்றேன்.
ஏனெனில் இதுவொரு பலமுள்ள அரசாங்கமாக அமைந்துள்ளதால் மேற்கு நாடுகளின் அழுத்தங்களுக்கோ மாநிலங்களின் அழுத்தங்களுக்கோ உட்பட வேண்டிய தேவை மோடி அரசுக்கு இருக்காது.
எனவே, எமது மக்களின் எஞ்சிய பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கு நல்லதொரு சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், தெற்காசிய பிராந்தியத்தில் இன்னுமொரு மகிந்த ராஜபக்ஷ அரசத் தலைவராக உருவாகியுள்ளார் என்ற வகையில் எமது மக்கள் சார்பாக அவருக்கு எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேநேரம், முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் அவர்கள் சிறந்த பொருளாதார நிபுணர். பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்தவர். இருப்பினும் அவரது ஆட்சியின் இறுதிக்காலங்களில் மேற்கு நாடுகளின் பல்வேறு அழுத்தங்களுக்கு உட்பட வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டு விட்டது எனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.