ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் முன்மொழிவிற்கு இணங்க இலங்கையில் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களும், மனிதநேயச் சட்டங்களும் மீறப்பட்டமை தொடர்பான அனைத்துலக விசாரணையைக் கொண்டு வருவதற்கான முழு முயற்சிகளையும் தமது அரசாங்கம் எடுத்து வருவதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் உறுதியளித்துள்ளார்.
ஈழப்பிரச்சினை தொடர்பாக இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு வில்லியம் ஹேக் அவர்கள் தெரிவித்துள்ளார்:
'We are pursuing the issue actively at the Human Rights Council to secure an international inquiry of the type recommended by the United Nations High Commissioner for Human Rights.'
இலங்கையில் இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்தை வலியுறுத்தி பிரித்தானியா, அமெரிக்கா, மொன்ரநெக்ரோ, மசடோனியா, மொறீசியஸ் ஆகிய நாடுகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் நகல் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஈழப்பிரச்சினை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக், கடந்த நவம்பர் மாதம் இலங்கை சென்றிருந்த பொழுது பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் வாக்குறுதியளித்தபடி இலங்கை மீதான அனைத்துலக விசாரணைகள் நம்பகமான முறையிலும், சுயாதீனமான விதத்திலும் நடைபெறுவதற்கு தேவையான முழு முயற்சிகளையும் பிரித்தானிய அரசாங்கம் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழு அளவிலான விவாதம் எதிர்வரும் வாரங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறும் என்றும், ஆனாலும் இவ்விவாதங்களின் பெறுபேறாக அனைத்துலக சுயாதீன விசாரணைகள் இடம்பெறுவதற்கான முழு முயற்சிகளையும் பிரித்தானிய எடுக்கும் என்றும் வில்லியம் ஹேக் உறுதியளித்துள்ளார்.

Post a Comment