‘நெடுஞ்சாலை’ படத்தின் கதாநாயகன் ஆரி கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நான் பழனியை சேர்ந்தவன். கடந்த 9 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றேன். அங்கு பல போராட்டங்களுக்கு பிறகு சினிமாவிற்குள் நுழைந்தேன். எனது முதல் படம் ‘ரெட்டை சுழி’. தொடர்ந்து ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’ படத்தில் நடித்தேன். இப்போது ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணனின் ‘நெடுஞ்சாலை’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன்.
என்னுடன் கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த சிவதா நடிக்கிறார். படத்தில் தம்பி ராமையா, சலீம், பாலிவுட் நடிகர்கள் பிரஷாந்த், நாராயணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
‘நெடுஞ்சாலை’ படம் ரோட்டோரத்தில் வியாபாரம் செய்யும் நாயகனுக்கும், ரோட்டோரத்தில் தாபா கடை நடத்தி வரும் நாயகிக்கும் இடையேயான காதலை வெளிப்படுத்தும் படமாகும்.
1960,1980, 2014 வருடங்களை வெவ்வேறு காலதொடர்புகளுடன் பிரதிபலிக்கும். ரூ.7 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் வருகிற 28–ந் தேதி இந்தியா முழுவதும் ரிலிசாகிறது. இந்த படம் அனைத்து தரப்பினரும் சென்று பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீட்டின்போது பொதுமக்களிடையே சாலை விபத்தை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம். அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம், விபத்து விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை குறித்து பொதுமக்களிடையே பிரசாரம் செய்வோம் என்றார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் புதுப்புது கதாநாயகர்கள் வருகிறார்கள். படத்திற்கு கதாநாயகர்கள் முக்கியமா? கதை முக்கியமா? என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு கதை தான் படத்தின் கதாநாயகன் என்று பதிலளித்தார்.

Post a Comment