0
பெண் பொறியியலாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம், சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். கணனி நிறுவனத்தில், மென்பொருள் பொறியியலாளராக வேலை பார்த்து வந்த உமாமகேஸ்வரி கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.


இவரது உடல் சிறுசேரி சிப்காட் வளாகத்தின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.


இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி பொலிசார் விசாரணை நடத்தியதில், சிப்காட் பகுதியில் தங்கி கட்டிட வேலைபார்த்த, மேற்கு வங்காள மாநில கட்டிட தொழிலாளிகள் உத்தம் மண்டல், உஜ்ஜன் மண்டல், ராம்மண்டல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


மேலும் பொறியியலாளர் உமாமகேஸ்வரியை கொடூரமாக இவர்கள் 3 பேரும் சேர்ந்து, கற்பழித்து, பின்னர் கொலை செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.


இவர்கள் 3 பேரும் குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலமும் கொடுத்து விட்டனர், இதனைத் தொடர்ந்து 3 பேரும் நேற்று மாலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


3 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் கொலையாளி உத்தம் மண்டல் புழல் மத்திய சிறையிலும், ராம்மண்டல், உஜ்ஜன் மண்டல் இருவரும், சென்னை சைதாப்பேட்டை சப்-சிறையிலும் அடைக்கப்பட்டனர்.


இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இவர்கள் 3 பேர் மட்டும் இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் ஆவார்கள். இவர்களுடைய கூட்டாளி இந்திரஜித் மண்டல், வழக்கின் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.


உமா மகேஸ்வரியை தூக்கிச் சென்று கற்பழித்து, கொலை செய்த சம்பவத்திற்கு காவல் பணியை செய்தது, இந்திரஜித் . ஆனால் கொலை மற்றும் கற்பழிப்பில் இந்திரஜித் சம்பந்தப்படவில்லை. இதனால் அவரை முக்கிய சாட்சியாக வழக்கில் போட்டுள்ளோம்.


மேலும் விரைவில் கொலையாளிகள் அடையாள அணிவகுப்பு சிறையில் வைத்து நடத்தப்படும் என்றும் தடய அறிவியல் நிபுணர்களின் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை போன்றவை கிடைத்தவுடன், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

Post a Comment

 
Top