தர்மபுரி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் 20 ஆண்டுகளாக தூக்கமில்லாமல் தவித்து வருகிறார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கே.அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராஜு (50). இவருக்கு திருமணமாகி 22 வருடம் ஆகிறது. விவசாய தொழில் செய்து வரும் இவருக்கு கல்லூரிக்கு செல்லும் வயதில் மகன், மகளும் உள்ளனர்.
கடந்த 20 ஆண்டுக்கு முன் வீட்டில் இருந்த தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துள்ளார். அப்போது திடீரென கீழே விழுந்ததில் தோள்பட்டையின் பின்புறம் வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.
அதன்பின்னர் ஆரம்பத்தில் தூக்கம் வராமல் இரவில் உலாவ ஆரம்பித்த இவர் அதற்கான காரணமே தெரியாமல் உள்ளூரில் ஒரு மருத்துவரிடமும், தர்மபுரியில் ஒரு தனியார் மருத்துவரிடமும் மருத்துவ ஆலோசனை பெற்றார்.
மருத்துவரின் பரிந்துரைப்படி தினசரி ஒரு தூக்க மாத்திரை சாப்பிட்டும் பலன் இல்லை. தூக்கம் வராமல் கடந்த 20 ஆண்டாக தவித்து வருகிறார்.
இதுகுறித்து ராஜு கூறுகையில், 20 ஆண்டுகளாக ஒரு மணி நேரம் கூட முழுமையாக தூங்கியதாக நினைவில்லை. எல்லோரையும் போல் இரவு 9 மணிக்கு படுக்கைக்கு செல்வேன். தூக்கம் வராது. வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். நான் மட்டும் எழுந்து ரோட்டில் நடமாடுவேன். நான் இரவில் நடமாடுவதை பலர் சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தனர்.
இதனால், பலமுறை நான் இரவில் வெறுமையாக அமர்ந்திருப்பேன். இதை பார்த்து என் மனைவி, குழந்தைகளும் தூக்கத்தை தொலைத்தனர். என்னால் அவர்கள் பாதிக்கக்கூடாது என்பதால் இப்போதெல்லாம் படுக்கையில் படுத்திருப்பேன். ஆனால் தூக்கம் வராது. மருத்துவ சிகிச்சையும் எடுத்து பார்த்தேன். எந்த பலனும் இல்லை.
இது, ஏதோ ஒரு நோய் போல் நீடிப்பதால் குழந்தைகள் நலன் கருதியாவது மருத்துவ சிகிச்சைக்கு செல்லலாம் என கருதுகிறேன் என்றும் ஆனால் இதற்கு போதிய நிதி வசதியில்லை எனவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, சேலம் மோகன்குமாரமங்கலம் மருத்துவமனை நரம்பியல் பிரிவு பேராசிரியர்கள் கூறுகையில், கீழே விழுந்ததில் மூளை மற்றும் கண்களுக்கு இடையிலான நரம்பு மண்டலத்தில் ஏதாவது பாதிப்பு இருக்கலாம். பரிசோதனை செய்தால்தான் பாதிப்பின் தன்மையை உணரமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.


Post a Comment