0
ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமை தொடர்பான கூட்டத்தொடரிலே ஜெயக்குமாரியோ அல்லது அவருடைய மகளோ சாட்சியமளித்து விடக்கூடாது என்பதற்காக மிக திட்டமிட்டு கைது இடம்பெற்றுள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 



வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். ஜனநாயக ரீதியான போராட்டத்தை சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரியின் விடுதலைக்கு குரல் கொடுக்கவேண்டும் என நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம். 


இந்த நேரத்தில் ஜெயக்குமாரியின் குடும்ப நிலையை சொல்லவேண்டிய தேவையுள்ளது. அவருடைய கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார். அவருடைய இன்னுமோர் மகன் இந்த போராட்டத்தில் வீரச்சாவு அடைந்துள்ளார். அதேபோல் இன்னொரு மகன் முள்ளிவாய்க்கால் போரில் செல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். 

இதேவேளை இடம்பெயர்ந்து வவுனியா முகாமில் தங்கியிருந்த நேரத்தில் அவருடைய  மூன்றாவது மகன்   கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார். அந்த வகையில் ஜெயக்குமாரியின் மூன்று பிள்ளைகள் இன்று இல்லாமல் போயிருக்கின்றார்கள். 


இந்த வேளையிலேயே தனது 13 வயதான விபூசிகாவின் படிப்பு மற்றும் பொருளாதாரத்திற்காக ஜெயக்குமாரி நாளாந்தம் தினக்கூலி வேலை செய்தே காப்பாற்றி வந்துள்ளார். 


இதேவேளை காணாமல் போன மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஜெயக்குமாரியும் அவருடைய மகளும் போராட்டங்களில் பங்கு பற்றியிருந்ததன் அடிப்படையில் ஊடகங்களில் முக்கியமான இடம்பிடித்திருந்தமையினால் தற்சமயம் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமை தொடர்பான கூட்டத்தொடரிலே ஜெயக்குமாரியோ அல்லது அவருடைய மகளோ சாட்சியமளித்து விடக்கூடாது என்பதற்காக மிக திட்டமிட்டு இந்த கைது இடம்பெற்றுள்ளது. 


இந்த கைதுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த காரணங்கள் இன்றைக்கு உண்மையை மறைக்கும் விதத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களாகவுள்ளன. 


இன்று யுத்தம் முடிந்து 5 வருடம் கடந்துள்ள நிலையில் எந்தவொரு இடத்திலும் துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை. அல்லது குண்டுத்தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த சம்பவம் கூட திட்டமிட்டு சோடிக்கப்படும் கதையே ஆகும். 


ஆகவே மீண்டும் இந்த அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளையும் ஆயத போராட்டத்தையும் வலிந்து இழுக்கும் தேவையுள்ளது. அதற்கு காரணம் தெற்கில் அவர்களின் அரசியலை முன்னெடுத்து செல்வதற்கு வடக்கிலும் கிழக்கிலும் இந்த ஆயுத போராட்டத்தை உயிர்ப்பிக்க வேண்டிய தேவை இந்த அரசுக்கு உள்ளது. 


ஆகவே இந்த திட்டமிட்ட கைதுகள் கண்டிக்கப்படுவதோடு ஜெயக்குமாரி மற்றும் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

 
Top