ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இறுதி வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இலங்கையில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல் மற்றும் தென்மாகாண தேர்தல் பிரசாரங்களில், ஜெனிவா யோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை படையினருக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற நிலைப்பாட்டை நேரடியாக கூறுவதில்லை. சிங்கள வாக்குகள் பறிபோகும் என்ற அச்சமே அதற்கான காரணமாகும்.
அண்மையில் கூட நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல, இறுதியாக வெளியான இலங்கைப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றையே வலியுறுத்தினார்.
அதேநேரம், இவ்வாறான காணொளிகள் சனல் 4 ஊடகத்துக்கு கிடைத்தமைக்கு அரச ஊடகவியலாளர்களே காரணம் என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
இதற்கிடையில் தென்மாகாண தேர்தல் பிரசாரம் ஒன்றின் போது ஆளும் கட்சி ஜெனிவா யோசனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதனை தேர்தல் அத்துமீறல் என்று ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த, தமக்கு தெரியாமல் இந்த விடயம் நடந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை இவ்வாறான தேர்தல் அத்துமீறல்களை விசாரணை செய்ய சென்ற தேர்தல் அதிகாரிகளை நாய்கள் என்ற வர்ணித்து, அவர்களை அமைச்சர் காமினி லொக்குகே துரத்திய சம்பவமும் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

Post a Comment